முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது ஏன்? - ராணுவம் விளக்கம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது ஏன்? - ராணுவம் விளக்கம்
x
தினத்தந்தி 3 Aug 2023 9:30 AM GMT (Updated: 3 Aug 2023 11:01 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டுவிட்டர் பதிவை நீக்கியது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதாக ராணுவத்தின் வடக்கு தலைமையகம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த டுவிட்டர் பதிவை மறுபகிர்வு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனிடையே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுபகிர்வு செய்த டுவீட்டை ராணுவத்தின் வடக்கு தலைமையகம் நீக்கியது. இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி முதல்-அமைச்சரின் டுவீட் பதிவை ராணுவம் நீக்க காரணம் என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், பெண் ராணுவ ஜெனரலுக்கு வாழ்த்து தெரிவித்து, ராணுவத்தின் வடக்கு கமாண்ட் பதிவிட்ட டுவீட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த நிலையில், அது நீக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வான முதல் பெண் ராணுவ ஜெனரலை வாழ்த்துகிறோம். முதல் பெண் ஜெனரல் குறித்த செய்தியை ராணுவத் தலைமையகம் பகிர்வதற்கு முன்னதாகவே வடக்கு தலைமையகம் பகிர்ந்ததால் டுவீட் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ராணுவ தலைமையகம் பகிர்ந்த டுவீட்டை வடக்கு பிராந்திய தலைமையகம் மறுபகிர்வு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story