கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை
கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரவலாக மழை
கரூரில் நேற்று மாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 5.15 மணியள வில் இருந்து 6.30 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் வரை மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
குளித்தலை
குளித்தலை பகுதியில் நேற்று பகல் நேரங்களில் வெயில் அடித்து வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து லேசாக பெய்ய தொடங்கிய மழை மிதமான மழையாக பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் மிதமான மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டது.
தோகைமலை
தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று காலையில் இருந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தடுப்பணைகள், ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. கிணறுகளில் போதுமான அளவு நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. மேலும், இந்த கனமழையால் தோகைமலை அருகே பில்லூர் பெரிய குளத்தில் மழைநீர் கடல் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல்
நொய்யல், தவுட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய் புகழூர், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, புகழிமலை, காகிதபுரம், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம், கட்டிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 3-வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், வாங்கல், நெரூர், மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன.
மழையளவு
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கரூர்-1.4, குளித்தலை-4, தோகைமலை-8, கிருஷ்ணராயபுரம்-2, மாயனூர்-2, பஞ்சபட்டி-2, கடவூர்-5, பாலவிடுதி-22.2, மைலம்பட்டி-26.