கணவர் இறந்த துக்கத்தில் மனைவி சாவு


கணவர் இறந்த துக்கத்தில் மனைவி சாவு
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 65), தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (55). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் சின்னதம்பியும், லட்சுமியும் தனியாக வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக சின்னதம்பி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் நலன் சரியாகவில்லை.

இந்த நிலையில் வீட்டில் இருந்த சின்னதம்பி கடந்த 13-ந்தேதி இறந்தார். அப்போது அவரின் உடலை பார்த்து லட்சுமி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து சின்னதம்பியின் உடல் நேற்று முன்தினம் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

மனவருத்தம்

கணவரின் பிரிவை தாங்க முடியாமல் வீட்டில் லட்சுமி அழுது கொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதைபார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், சின்னதம்பி உடலை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லட்சுமியின் உடலையும் அடக்கம் செய்தனர்.

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story