டேன்டீ குடியிருப்பில் காட்டு யானை முகாம்


டேன்டீ குடியிருப்பில் காட்டு யானை முகாம்
x
தினத்தந்தி 5 Sept 2023 1:15 AM IST (Updated: 5 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கொளப்பள்ளி டேன்டீ குடியிருப்பில் காட்டு யானை முகாமிட்டது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

நீலகிரி

பந்தலூர்

கொளப்பள்ளி டேன்டீ குடியிருப்பில் காட்டு யானை முகாமிட்டது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

தடுப்பணையில் குளித்தன

பந்தலூர் அருகே கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.1 பத்து லைன்ஸ், ரேஞ்ச் எண்.2 பாலவாடி லைன்ஸ், காளிகோவில் லைன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை தாக்கி வருகின்றன. சில நேரங்களில் தோட்டங்களில் பணிபுரியும் தேயிலை தொழிலாளர்கள், சாலையில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களை துரத்தி வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் காளிகோவில் லைன்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகளை 6 காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அவர்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். பின்னர் அங்கிருந்து தொழிலாளர்கள் குடிநீராக பயன்படுத்தும் தடுப்பணைக்கு யானைகள் சென்றன. அங்கு குட்டிகளுடன் யானைகள் குளித்து மகிழந்தன.

வாகனங்களை வழிமறித்தது

அப்போது யானைகள் பிளிறின. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து அதிகாலை 5 மணிக்கு சாமியார் மலை அடிவாரத்திற்கு சென்றன. இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 ஒற்றை லைன்ஸ் பகுதியில் நேற்று காலையில் காட்டு யானை புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அங்கு தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிவறையை ஒட்டி முகாமிட்டதால், தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.

அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி, பந்தலூர், கூடலூர் சென்ற அரசு பஸ்கள், வாகனங்களை காட்டு யானை வழிமறித்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சேரம்பாடி வனவர் குமரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். ½ மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story