வாகனங்களை வழிமறிக்கும் காட்டுயானைகள்
மசினகுடி-ஊட்டி சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டுயானைகளால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்
மசினகுடி-ஊட்டி சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டுயானைகளால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்து வருகின்றனர்.
சாலையில் காட்டுயானைகள்
கூடலூர், பந்தலூர் மற்றும் மசினகுடி பகுதியில் அடர்ந்த வனங்கள் உள்ளன. இங்கு காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை தீவனம் தேடி அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. இந்த நிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையை காட்டுயானைகள் அடிக்கடி கடந்து செல்கிறது. அப்போது சாலையின் நடுவில் நின்று கொண்டு வாகனங்களை வழிமறிப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
விரட்ட வேண்டும்
நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு சீகூர் பாலம் பகுதியில் நடுரோட்டில் காட்டுயானை ஒன்று வந்து நின்றது. இதனால் கர்நாடகாவில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். பின்னர் சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு காட்டுயானை அங்கிருந்து சென்றது. அதன்பின்னரே அங்கு வாகன போக்குவரத்து தொடங்கியது. இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், காட்டுயானைகள் வரும் சமயத்தில் உடனடியாக விரட்ட முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.