2 ரேஷன் கடைகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்


2 ரேஷன் கடைகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 2 ரேஷன் கடைகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் 2 ரேஷன் கடைகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

காட்டுயானைகள்

கேரள வனப்பகுதிகளில் இருந்து வந்த 80-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வால்பாறை வனப்பகுதிகளில் முகாமிட்டு வருகிறது. இந்த யானைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் முடீஸ் பஜார் பகுதியில் 12 யானைகள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையின் கதவை உடைத்து அட்டகாசம் செய்தன. மேலும் ரேஷன் அரிசியை எடுத்து தின்றும், சிதறடித்தும் சூறையாடியது. இதை அறிந்து வந்த வனத்துறையினர் தொழிலாளர்களுடன் இணைந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

இதேபோன்று நள்ளிரவு 12.30 மணியளவில் 5 யானைகள் கொண்ட கூட்டம், தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. தொடர்ந்து குடியிருப்புக்கு நடுவில் அமைந்துள்ள மகளிர் சுய உதவிக் குழு ரேஷன் கடையை உடைத்து ரேஷன் அரிசியை தின்றது. தொழிலாளர்கள் திரண்டு வந்து விரட்டியும் போகாததால், எஸ்டேட் நிர்வாகத்தினர் வனத்துறையினர் உதவியுடன் லாரியை கொண்டு வந்து யானைகளை விரட்டினர். அங்கிருந்து சென்ற யானைகள், சோலையாறு எஸ்டேட் பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனால் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்துடன் தொழிலாளர்கள் உள்ளனர். மானாம்பள்ளி வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் இல்லாத நிலையில் மீண்டும் வர தொடங்கியுள்ளதால் எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் நள்ளிரவிலும், அதிகாலை நேரத்திலும் கவனமாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முடீஸ் பகுதியில் காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியதால் பணியாளர் அன்னலட்சுமி கடைக்கு வெளியே அமர்ந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க பில் போட்டு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story