வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
பந்தலூர் அருகே காட்டு யானைகள் வீட்டை உடைத்துஅட்டகாசம் செய்தன. இதனால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
பந்தலூர் அருகே காட்டு யானைகள் வீட்டை உடைத்துஅட்டகாசம் செய்தன. இதனால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
காட்டு யானைகள்
பந்தலூர் அருகே கொளப்பள்ளி, ஏலமன்னா, கருத்தாடு, எடத்தால், கோட்டப்பாடி, மழவன் சேரம்பாடி, தட்டாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவை விளைநிலங்களுக்குள் நுழைந்து வாழை, தென்னை, பாக்கு மரங்கள் மற்றும் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துகின்றன. அவ்வப்போது சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி வருகிறது.
சில நேரங்களில் கொளப்பள்ளியில் இருந்து ஏலமன்னா, எலியாஸ் கடை வழியாக பந்தலூர், அய்யன்கொல்லி, கூடலூர் செல்லும் அரசு பஸ்களை தாக்கி வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொளப்பள்ளி கருத்தாடு அரசு பள்ளி அருகில் உள்ள பகுதிக்குள் 2 காட்டு யானைகள் புகுந்தன. ஆதிவாசியான சங்கரன் என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தின.
குடியிருப்புகள் முற்றுகை
அப்பகுதியில் இருந்த குறுமிளகு மரங்களை வேரோடு சாய்த்தது. பின்னர் தொடர்ந்து விடிய, விடிய குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதனால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி அறிவுரையின் படி, வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர்கள் கோபு, சுரேந்திரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேதமடைந்த வீடு, பயிர்களை பார்வையிட்டனர். அப்போது காட்டு யானைகள் சேதப்படுத்திய வீடு மற்றும் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதற்கு வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதேபோல் ஏலமன்னாவில் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. அங்கு விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானைகளை விரட்டினர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.