அம்மன் கோவில், ரேஷன் கடையை சூறையாடிய காட்டுயானைகள்
வால்பாறையில் அம்மன் கோவில், ரேஷன் கடையை சூறையாடி காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன.
வால்பாறை
வால்பாறையில் அம்மன் கோவில், ரேஷன் கடையை சூறையாடி காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன.
ரேஷன் கடை
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தொடர்ந்து சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து ஏதாவது ஒரு எஸ்டேட் பகுதியில் யானைகளால் சேதங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி மற்றும் நேற்று அதிகாலை 5 மணி ஆகிய நேரங்களில் பன்னிமேடு எஸ்டேட் தொழிற்சாலை பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் மீண்டும் ஒற்றை காட்டுயானை நுழைந்தது. தொடர்ந்து அங்குள்ள ரேஷன் கடையின் பின்பகுதி சுவற்றை உடைத்து, உள்ளிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வெளியே எடுத்து சாப்பிட்டது. மேலும் மீதமுள்ள அரிசி மூட்டைகளை அந்த பகுதி முழுவதும் வாரி இறைத்து அட்டகாசம் செய்தது.
அம்மன் கோவில்
இதை அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் எஸ்டேட் தொழிலாளர்கள் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டினர். அதன்பின்னரே யானை அங்கிருந்து சென்றது.
இதேபோன்று சிங்கோனா எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள டேன்டீ தொழிற்சாலை வளாகத்தில் நுழைந்த 3 காட்டு யானைகள் துர்க்கை அம்மன் கோவிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தன. மேலும் அம்மனின் அலங்கார பொருட்கள் மற்றும் சிலைகளை உடைத்ததோடு அங்கிருந்த அனைத்து பொருட்களையும் சூறையாடின. மேலும் கோவிலின் முன் புறம் இருந்த அறையின் மேற்கூரையையும் உடைத்து சேதப்படுத்தின.
பீதி
இதையடுத்து வனத்துறையினர் மற்றும் எஸ்டேட் பகுதி மக்கள் திரண்டு விரட்டியும் போகாத காட்டு யானைகள் நீண்ட நேரம் கோவில் வளாகத்திலேயே நின்றிருந்தது. பின்னர் அதிகாலையில் அங்கிருந்து சென்று அருகில் உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டு நின்று வருகிறது. வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் இரவு நேரம் வந்தாலே காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்த அச்சத்திலும், பீதியிலும் இருந்து வருகின்றனர்.