காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?


காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
x

குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், தாழ்வான இடங்களில் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடுவதால் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்

குமாரபாளையம்

மக்கள் நெருக்கம் அதிகம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜவுளி தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற நகரமாகும். இங்கு விசைத்தறி நெசவு, கைத்தறி நெசவு, ஆயத்த ஆடை தயாரிப்பு, சாய தொழில், ரப்பர் நாடா தயாரிப்பு போன்ற பல்வேறு தொழில்கள் மிகுதியாக நடைபெற்று வருகின்றது.

இங்கு விசைத்தறிகள் மூலம் லுங்கி, துண்டு, சுடிதார், சட்டை, பெட்ஷீட் மற்றும் புடவை போன்ற அனைத்து ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. தொழில் பெருக, பெருக இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் குடியேறி வருகின்றனர். எனவே நாமக்கல் மாவட்டத்திலேயே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஒரு நகரமாக குமாரபாளையம் உருவெடுத்து வருகிறது. சுமார் 8 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட குமாரபாளையம் நகரில் 1½ லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகர எல்லையான பாறையூர் பிரிவில் தொடங்கி முடிவு எல்லையான எம்.ஜி.ஆர். நகர் வரை உள்ள சுமார் 4 கி. மீட்டர் நீளம் காவிரி ஆற்றின் இடது கரையில் தாழ்வான பகுதிகளில் மக்கள் குடியிருப்பு அமைந்து உள்ளது.

காவிரி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள நகரில் தாழ்வான பகுதிகள் என்று கணக்கிடக்கூடிய கலைமகள் தெரு, இந்திரா நகர், பழையபாலம், அண்ணா நகர், மணிமேகலை தெரு, சின்னப்ப நாயக்கன்பாளையம், மேட்டுக்காடு போன்ற பகுதிகளில் காவிரி ஆற்றில் சுமார் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தாலே வீடுகளுக்குள் புகுந்து விடும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாததால் அவற்றை பற்றியும், அதன் பாதிப்புகளை பற்றியும் மக்களும் அறியவில்லை. அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

வீடுகளுக்குள் புகும் தண்ணீர்

ஆனால் இந்த ஆண்டு காவிரி ஆற்றில் 5 முறைக்கு மேல் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகினர். வீட்டைவிட்டு மூட்டை, முடிச்சுகளை கட்டிக்கொண்டு குழந்தைகளுடன் அரசு ஏற்படுத்தி தந்துள்ள பாதுகாப்பான முகாமில் தஞ்சம் புக வேண்டிய நிலை ஏற்பட்டது.

முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பான தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள், தாங்கள் உள்ளூரிலேயே அகதிகளை போல வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். வெள்ளம் வரும்போது பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதாக வருகிற அரசு நிவாரண உதவிகளை மட்டும் தந்துவிட்டு பின் அவர்களை கண்டு கொள்வதில்லை என்ற புகாரும் உள்ளது.

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

இது பற்றி காவிரி நகர் கருப்பண்ணன் கூறியதாவது:-

ஆற்றோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் ஏழை நெசவாளர்கள், கொத்தனார்கள், கடைநிலை ஊழியம் செய்யும் சாதாரண மக்கள். அவர்களுக்கு இந்த இடத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லை. அவர்களுக்கு கிடைக்கின்ற வருவாயை வைத்து இங்குதான் வசிக்க முடியும்.

எப்போதெல்லாம் காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் வருகிறதோ, அப்போதெல்லாம் குமாரபாளையத்தில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவது இயற்கையாகவே இருக்கிறது. மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களை முகாமில் தங்க வைப்பது. பின்னர் அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை வழங்குவதும், அதையடுத்து ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டால் மீண்டும் அதே இடத்துக்கு அவர்களை போக சொல்வதும், அவர்களுக்கு நிரந்தரமற்ற வாழ்க்கை முறையாக உள்ளது.

நிரந்தர தீர்வு என்று பார்த்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாற்று இடம் வழங்குவது தான். மேலும் நகரம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று வருகிறது. போக்குவரத்திற்கும் பிரச்சினையாக உள்ளது. எனவே காவிரி ஆற்றோறம் சுமார் 20 அடி அகலத்தில், 10 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். இந்த தடுப்புச்சுவர் ஒரு மாற்று பாதையாகவும் அமையும்.

பாதுகாப்பான வீடு

மணிமேகலை தெரு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்ரீதர்:-

குமாரபாளையம் நகருக்குள் 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது மணிமேகலை தெரு, இந்திரா நகர் தான். இப்பகுதி மிக, மிக தாழ்வாக உள்ளது‌. ஆற்றோரத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் 30, 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் பட்டாவும் வழங்கி உள்ளது. பல ஆண்டுகளாக இதே ஊரில் வசித்து வருவதால் வேறு இடங்களுக்கு போக மனமில்லை.

அதனால் தான் முன்பு இங்கேயே நிரந்தரமாக குடியிருக்க பாதுகாப்பான வீடு கட்டி தருமாறு கேட்டிருந்தார்கள். காவிரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் நுழையாதவாறு தடுப்புச் சுவர் கட்டித் தர வேண்டும். அரசாங்கம் தடுப்புச் சுவர் ஏற்படுத்தி தந்தால் 2 லட்சத்திற்கு மேல் கன அடி தண்ணீர் வந்தாலும் ஆற்று நீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாது. இருந்தாலும் அரசாங்கம் ஆற்றோரத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு பாதுகாப்பான வீடு கட்டி கொடுத்தால் நிரந்தர தீர்வாக அமையும். எனவே பாதுகாப்பான வீடு கட்டி தர அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிம்மதியாக இருப்போம்

குமாரபாளையம் கலைமகள் வீதியை சேர்ந்த சரஸ்வதி கந்தசாமி:

நான் நெசவு தொழில் கூடத்தில் நூல் ஓட்டும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இதனை கொண்டு வயதான தாயாரை கவனித்துக் கொண்டு, எனது மகனையும் படிக்க வைத்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே ஆற்றில் தண்ணீர் வரும்போது நாங்கள் மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு அரசு முகாமில் தஞ்சம் புக வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அங்கு இருக்கும்போது உணவு, இருப்பிடம் ஆகியவற்றை கொடுத்தாலும் எங்களுக்கு நிரந்தரமாக ஒரு இடமில்லையே, நிம்மதியாக வாழ முடியவில்லையே என்ற வேதனையில் தவித்து வருகிறோம். அரசு ஒரு மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுத்தால் நிம்மதியாக இருப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story