நிரந்தர குப்பை கிடங்கு அமைக்கப்படுமா?
திட்டச்சேரி பேரூராட்சியில் நிரந்தர குப்பை கிடங்கு அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
திட்டச்சேரி பேரூராட்சியில் நிரந்தர குப்பை கிடங்கு அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி பேரூராட்சி
திட்டச்சேரி பேரூராட்சி 15 வார்டுகளையும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் சேமிக்கப்படும் குப்பைகள் டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் ஏற்றி ஆலங்குடிச்சேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு கழிவுகளை பிரித்து இயற்கை உரம், மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குப்பைகள் கொட்ட எதிர்ப்பு
மீதம் உள்ள குப்பைகள் கொட்ட முறையாக குப்பை கிடங்கு இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டச்சேரி பஸ் நிலையத்திற்கு பின்புறம் குப்பை கிடங்கு இருந்தது. இங்கு குப்பைகள் கொட்ட வர்த்தகர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்த குப்பை கிடங்கு அகற்றப்பட்டது.
பின்னர் தோப்புக்களத்தில் 3 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டதால் தோப்புக்களத்தில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டது.
நிரந்தர கிடங்கு அமைக்க வேண்டும்
இந்த நிலையில் தற்போது திட்டச்சேரி - நாகூர் மெயின் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படும் நிலையில் இதற்கும் அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். .
திட்டச்சேரி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படுவது போல் திட்டச்சேரி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிரந்தர குப்பை கிடங்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.