ஆனைமலை மத்திய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா...


ஆனைமலை மத்திய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா...
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை மத்திய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா...

கோயம்புத்தூர்

மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், தென்னையின் மேற்கூரையின் கீழே அமைந்துள்ள வளர்ந்து வரும் நகரம் தான் ஆனைமலை. இந்த நகரை சுற்றி சுற்றி சுற்றுலா தளம் அமைந்துள்ளது தான் இதன் தனிசிறப்பாகும். குளிக்க குரங்கு நீர்வீழ்ச்சி, ரசிக்க ஆழியாறு அணை, பக்தர்கள் தரிக்க மாசாணியம்மன், வனவிலங்குகளை பார்க்க டாப்சிலிப் மற்றும் வனஉயிர் காப்பம், பட்டாம்பூச்சி பூங்கா என சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. திரைப்படங்களில் ஆரம்பத்தில் கண்ணை கவரும் வகையில் காட்டப்படும் இயற்கை காட்சிகள் பெரும்பாலும் ஆனைமலை பகுதியில் தான் படமாக்கப்பட்டுள்ளது என்றால் அதுமிகையாகாது.

இவ்வளவு பெருமை கொண்ட ஆனைமலைக்கு பஸ் நிலையம் இல்லை என்றால் எந்த மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் உண்மை நிலை அதுதான். இங்குள்ள பஸ்நிலையம் 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. பஸ் பயணிகள் நடைபோட வேண்டிய இடத்தில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வசித்து வருகின்றன.

பயன்பாட்டில் இல்லாத பஸ் நிலையம்

இந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாத பஸ் நிலையத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ஆனந்தபாபு(ஆனைமலை):- ஆனைமலை பகுதியில் சுமார் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவில், சுற்றுலா தலமான டாப்சிலிப், ஆழியாறு அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. கோவில் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு 2001-ம் ஆண்டு ஆனைமலை அரசு பள்ளி அருகே ரூ.20 லட்சத்தில் 10 கடைகளுடன் மத்திய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. 3 மாதங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்த பின்னர் மூடப்பட்டது. அதன்பின்னர் இந்த பஸ்நிலையத்தை திறக்க அதிகாரிகள் எந்தநடவடிக்கையும் எடுக்காததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. தற்போது விஷசந்துக்கள் நடமாடும் இடமாக மாறியுள்ளது. எனவே பஸ் நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக விரோதிகளின் கூடாரம்

மனோஜ் (ஆட்டோ டிரைவர், ஆனைமலை):-

மாசாணியம்மன் கோவிலுக்கு அமாவாசை, குண்டம் போன்ற சிறப்பு நாட்களில் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் ஆனைமலையில் பஸ் நிலையம் அலங்கோலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் மத்திய பஸ் நிலையம் மது அருந்தும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. மேலும் ஆனைமலைக்கு வரும் பஸ்கள் மத்திய பஸ் நிலையத்துக்கு வராமல் முக்கோணம் சாலையில் திரும்புவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மத்திய பஸ் நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நந்தாகுமார் (ஆனைமலை):-

முறையான திட்டமிடல் இல்லாமல், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் மத்திய பஸ் நிலையம் கட்டப்பட்டதால், பஸ் நிலையம் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் வீணாகி உள்ளது. மேலும் முக்கோணம், மாசாணியம்மன் கோவில் அருகே சாலையோரத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் நிலை உள்ளது. இதனால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதேபோல வெளியூர்களில் இருந்து மாசாணியம்மன் கோவிலுக்கு காரில் வருபவர்கள் சாலையோரத்தில் தான் காரை நிறுத்துகின்றனர். இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய பஸ் நிலையத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

போக்குவரத்து நெருக்கடி

மோகன் (ஆனைமலை):-

வேட்டைக்காரன்புதுார், டாப்சிலிப், கோட்டூர் பகுதிகளுக்கு ஆனைமலை வழியாக பஸ்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் முக்கோணம் பஸ் நிறுத்தத்தில் சாலையோரத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே மத்திய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் ஆனைமலையை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு பஸ் வசதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அல்லது பஸ் டெர்மினல் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Related Tags :
Next Story