சிதம்பரம் பஸ் நிலையம் மேம்படுத்தப்படுமா?
சிதம்பரம் பஸ் நிலையம் மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
சிதம்பரம்:
ஆம், சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து கடலூர், புதுச்சேரி, சென்னை, மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களுக்கும், சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் சிதம்பரம் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். அப்படிபட்ட பஸ் நிலையத்தின் தற்போதைய நிலை பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
குடலை புரட்டும் துர்நாற்றம்
சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருப்பதற்கு போதிய இருக்கை வசதி இல்லை. பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிற்க வேண்டிய இடத்தையும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பயனிகளுக்கு குடிநீர் வசதியும் இல்லை.
கழிப்பறை இருக்கிறது, ஆனால் முறையாக பராமரிக்காததால் குடலை புரட்டும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பெரும்பாலான ஆண்கள் திறந்தவெளியிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள். இது பெண்களை முகம் சுழிக்க வைக்கிறது.
இரவில் பாராக மாறும்...
இது ஒருபுறம் இருக்க பஸ் நிலையத்தை சுற்றிலும் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு மது வாங்கும் பிரியர்கள், பஸ் நிலையத்தில் அமர்ந்து குடிக்கிறார்கள். அதுவும், இரவு 8 மணிக்கு மேல் சிதம்பரம் பஸ் நிலையம் பாராக மாறி விடுகிறது. சமீபகாலமாக இரவில் திருநங்கைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. குறைகளை சரிசெய்து சிதம்பரம் பஸ் நிலையத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொருத்திருந்து பார்ப்போம்.