நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா? - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி


நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா? - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
x

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை,

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிற விழாவுக்காக கடந்த இரண்டு நாட்களாக மதுரையிலே பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டு இருக்கிற முதியோர் ஓய்வு ஊதியங்களை அந்த பயனாளிகளுக்கு வழங்குவதற்கு விளையாட்டு துறை அமைச்சர் முன் வருவாரா?.

கடந்த அதிமுக அரசின் திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு அந்த திட்டங்கள் செயல்படுமா, வருமா, வராதா என்று மக்கள் காத்திருக்கிறார்கள். குறிப்பாக மாணவர்கள் சமுதாயத்துக்கு மடிக்கணினி வழங்குகிற திட்டத்திற்குரிய உண்மை நிலையை உதயநிதிஸ்டாலின் விளக்கம் கொடுப்பதற்கு முன் வருவாரா?

கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் கூறிய உதயநிதி ஸ்டாலின் அது குறித்து ஏதேனும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடுவதற்கு எதுவும் வாய்ப்பு இருக்கிறதா?

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டு இருக்கிறதே அதற்கு அவர் என்ன விளக்கம் சொல்ல போகிறார், இன்றைக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் இது போன்ற திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு முழுமையாக செயல்படாமல் இல்லாமல் முடங்கி கிடக்கிறதே, இதற்கெல்லாம் விளக்கம் அளிப்பாரா?.

மதுரையில் நலத்திட்ட நிகழ்ச்சிக்காக மிகப் பிரம்மாண்டமான அளவிலே செய்திருக்கிற வரவேற்பு ஏற்பாடுகள்,மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி அவர் சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையிலே வெளியிடுவாரா? என்பதெல்லாம் அறிய மக்கள் , இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story