கரூர் பஸ் நிலையத்தில் இடிக்கப்பட்ட கட்டிடங்கள் விரைந்து கட்டப்படுமா?
கரூர் பஸ் நிலையத்தில் இடிக்கப்பட்ட கட்டிடங்கள் விரைந்து கட்டப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வளர்ச்சி அடையும் மாநகரம்
கரூர் மாநகரம் ஜவுளி ஏற்றுமதி, பஸ்கூண்டு கட்டும் தொழில், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு சிறப்பு பெற்று விளங்கி வருகிறது. இதனால் கரூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் தினமும் வேலை நிமித்தமாக பலர் கரூர் நகருக்குள் வந்து செல்கின்றனர். மேலும் அண்டை மாவட்டங்களான நாமக்கல், திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பஸ்கள் மூலமாக கரூருக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் கரூர் வளர்ச்சி அடைந்து வருகிறது.
20 ஆண்டுகளாக கோரிக்கை
கடந்த 1987-ம் ஆண்டிற்கு முன்பு தற்போது கரூர் உழவர் சந்தை இருக்கும் இடத்தில் கரூர் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட இட நெருக்கடியை கடந்த 1987-ம் ஆண்டு நவம்பர் மாதம் அங்கிருந்து தற்போது இயங்கி வரும் கரூர் பஸ் நிலையத்திற்கு பஸ் நிலையம் மாற்றப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், கோவை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு தொலைதூர மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகிறது. நகர பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படுவதால் நாளுக்கு நாள் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து சென்றது. இதில் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள், பயணிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கட்டிடங்கள் அகற்றம்
இந்தநிலையில் திருமாநிலையூர் பகுதியில் கரூர் புதிய பஸ் நிலையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கரூர் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் உள்ள கட்டிடப் பகுதிகள் பழுதடைந்து மேல் கூரைகள் அவ்வப்போது இடிந்து விழுந்து வந்தது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் அப்பகுதியில் இருந்த 22-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டு அந்த பகுதி முழுவதும் உள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
கடந்த டிசம்பர் மாதம் இடித்து அகற்றப்பட்ட நிலையில் தற்போது வரை அப்பகுதியில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கரூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இடமில்லாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
எதிர்பார்ப்பு
முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலர் தற்போது வெயில் காலம் என்பதால் அங்கு நிற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு தற்போது கீற்று கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே பயணிகளின் நலன் கருதி இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டி பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இட வசதி செய்து தர வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது செயல்பட்டு வரும் கரூர் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த வணிக வளாகத்தில் மேல் கூரைகள் பழுதடைந்து அவ்வப்போது இடிந்து விழுந்தது. இதையடுத்து புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.8 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் பணிகள் ெதாடங்கப்படும், என்றார்.