மாநில கல்விக்கொள்கைக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்


மாநில கல்விக்கொள்கைக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
x

மாநில கல்விக்கொள்கைக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? என்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அளிக்கும் அறிவுறுத்தல்களையும் சேர்த்து மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் எப்போதுமே மாணவர்கள் பக்கம் தான். இனியும் நாங்கள் போராடுவோம். சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கே போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இளைய சக்திகள் ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு எதிராக போராட வேண்டும்.

மாநில கல்விக்கொள்கையை ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் வகுத்து இருக்கின்றனர். இதை அவர்கள் அரசிடம் சமர்ப்பித்த பிறகு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். கவர்னர் மாநில கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்தால், அதற்கான நல்ல முடிவு மற்றும் நடவடிக்கையை முதல்-அமைச்சர் எடுப்பார்.

தேசிய கல்விக்கொள்கையை பற்றி பலர் பேசுகிறார்கள். எனக்கு ஒரு ஆசை வந்தே பாரத் ரெயில் மூலம் இங்கிருந்து மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர் மற்றும் பொது மக்களை வட இந்திய பகுதிகளுக்கு அழைத்து செல்ல வேண்டும். அங்குள்ள கல்வி வளர்ச்சி, பண்பாடு, கலாசாரம் பற்றியும், நம்முடைய வளர்ச்சி மற்றும் கலாசாரம் பற்றியும் தெரிய வைத்து அந்த வித்தியாசத்தை தெரிய வைக்க வேண்டும்.

கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து சென்று வருகிறோம். அதன்படி, வருகிற 4 மற்றும் 5-ந் தேதிகளில் சில மாணவர்களை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.

அதேபோல், அமெரிக்காவில் உள்ள டிஸ்னிக்கு அழைத்து செல்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது. விரைவில் அனுமதி கிடைத்ததும் அழைத்து செல்வோம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வைக்கும் கோரிக்கைகள் சரியானதுதான். தற்போது அதற்கான வெயிட்டேஜ் முறை தயார் பண்ணியிருக்கிறோம். அதை கோர்ட்டில் சமர்ப்பித்து, பின்னர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சந்திரயான்-3 தொடர்பான நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்

சந்திரயான்-3 தொடர்பான நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமா? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், 'கண்டிப்பாக பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான ஆசை எங்களுக்கு உள்ளது. சந்திரயான்-3 எப்படி உருவாக்கப்பட்டது? அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் யார்? எப்படி தரையிறங்கியது? போன்ற விவரங்கள் அடங்கிய சிறு கட்டுரையாவது சேர்க்கப்படும். வருகிற 11-ந் தேதி இதுதொடர்பான கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் ஆலோசிக்கப்பட்டு, வரும் கல்வியாண்டில் சேர்ப்பது தொடர்பான முயற்சிகளை பள்ளிக்கல்வித்துறை எடுக்கும்' என்றார்.


Next Story