சாலை மறியல் போராட்டம் வாபஸ்


சாலை மறியல் போராட்டம் வாபஸ்
x

நீடாமங்கலத்தில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு வழங்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து நீடாமங்கலம் ஒன்றியத்தில் நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதற்காக அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பரஞ்ஜோதி தலைமையில் சமாதான கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சு. பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் அ.டேவிட், மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் மற்றும் புள்ளியியல் துறையினர்,போலீசார் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு பயிர்காப்பீடு பிரீமியம் தொகையை அரசு பெற்று அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியார் துறைக்கு அனுமதி வழங்க கூடாது. அறுவடை நேரத்தில் ஏற்படும் சேதத்தை கணக்கில் கொண்டு இழப்பீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும்.2022-2023-ம் ஆண்டில் பயிர் கா்பபீடு செய்த நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகளின் முழு விவர பட்டியலை ஒரு வார காலத்துக்குள் போராட்ட தலைமைக்கு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரி்க்கைகள் முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடா்ந்து நேற்று நடக்க இருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.


Next Story