அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் வாடி வதங்கும் நெற்பயிர்கள்


அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் வாடி வதங்கும் நெற்பயிர்கள்
x

கார் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் நெற்பயிர்கள் வாடி வதங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென்காசி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி தாலுகாவின் பிரதான கால்வாயாக கன்னடியன் கால்வாய் திகழ்கிறது. இக்கால்வாய் மூலம் கல்லிடைக்குறிச்சி முதல் கோபாலசமுத்திரம் வரை சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. கால்வாயில் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தினாலும், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினாலும் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று கடந்த 19-ந் தேதி அணைகளில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் கால்வாயில் குறைந்த அளவு தண்ணீரே திறக்கப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை எனக் கூறி விவசாயிகள் சேரன்மாதேவியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையின்படி கால்வாயில் தண்ணீர் அதிகரிக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் அதிகரிக்கப்பட்ட சில நாட்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கால்வாயில் திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் நெற்பயிர்கள் வாடி வதங்கி கருகும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story