அச்சரப்பாக்கத்தில் பஸ்-கார் மோதிய விபத்தில் பெண் பலி


அச்சரப்பாக்கத்தில் பஸ்-கார் மோதிய விபத்தில் பெண் பலி
x

அச்சரப்பாக்கத்தில் பஸ்-கார் மோதிய விபத்தில் பெண் பலியானார்.

செங்கல்பட்டு

பெண் பலி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியில் அரசு பஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த கார் அரசு பஸ்சின் பின் பகுதியில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த தூக்குக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுகா உமரிக்காட்டை சேர்ந்த தங்கமேகலா (வயது 40) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் பயணம் செய்த அவருடைய கணவர் முத்துதுரை, 2 மகள்கள், டிரைவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவுக்கு உட்பட்ட திம்மச்சூர் ஊராட்சியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 25). கட்டிட மேஸ்திரி. நேற்று காலை அவர் சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே வரும்போது பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சதீஷ் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சீனிவாசனை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் ஒரு விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் நாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் தக்கப்பன் (வயது 60). கட்டிட மேஸ்திரி. இவர் காஞ்சீபுரத்தில் கட்டிட வேலையை முடித்து வீட்டுக்கு செல்வதற்காக மூங்கில் மண்டபம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.

அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தக்கப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தக்கப்பன் மகன் பொற்பாதம் அளித்த புகாரின்பேரில் விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story