பீடிக்கடையை பெண்கள் முற்றுகை
பாவூர்சத்திரம் அருகே பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பீடி நிறுவனத்தில் அக்கிராமப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு முறையாக வாரச்சம்பளம் வழங்கப்படவில்லையாம். மேலும் நிலுவைச்சம்பளம், போனஸ், விடுமுறை சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவை சுமார் 30 மாதங்களாக வழங்கப்படவில்லையாம்.
இந்நிலையில் தங்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்கக்கோரி பீடிசுற்றும் பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு கல்லூரணி பீடிக்கடையை முற்றுகையிட்டனர். இதனை அறிந்த கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை மற்றும் ஊர் பெரியவர்கள் பீடி நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் வரும் 16-ந் தேதி (அதாவது நாளை) சம்பளம் வழங்குவதாகவும், தீபாவளி பண்டிகைக்கு முன்பு விடுமுறை சம்பளம் மற்றும் அதன் பிறகு போனஸ் வழங்கப்படும் என நிறுவனத்தினர் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் கலைந்து சென்றனர்.