மீண்டும் விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்

மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்கள் , மேல்முறையீடு செய்து மீண்டும் விண்ணப்பிக்க இ-சேவை மையங்களில் குவிந்தனர். அங்கு இணையதள பிரச்சினையால் தாமதம் ஏற்பட்டது.
கூடலூர்
மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்கள் , மேல்முறையீடு செய்து மீண்டும் விண்ணப்பிக்க இ-சேவை மையங்களில் குவிந்தனர். அங்கு இணையதள பிரச்சினையால் தாமதம் ஏற்பட்டது.
மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தில் தகுதி உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட பெண்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டது. இருப்பினும், விண்ணப்பித்த பெண்களில் பலருக்கு பணம் வரவில்லை.
இதைத்தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட மற்றும் விடுபட்ட விண்ணப்பதாரர்கள் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் நேற்று பெண்கள் குவிந்தனர்.
கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் விண்ணப்பத்தை மறுபதிவு செய்வதற்கு திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர். இதேபோல் உரிமைத்தொகை பெறுவதற்காக தொடங்கப்பட்ட இணையதளமும் முடங்கியது. இதன் காரணமாக விண்ணப்பிக்க வந்த பெண்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இணையதள பிரச்சினை
இதுபற்றி பெண்கள் கூறும்போது, மகளிர் உரிமைத்தொகை பெற மறு பரிசீலனைக்கான விண்ணப்பத்தின் லிங்க் வந்து உள்ளதாகவும், ஆனால், இணையதளம் முடங்கி உள்ளதாக இ-சேவை மைய அலுவலர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் விண்ணப்பம் பதிவு செய்ய தாமதமாகிறது. மேலும் அனைவரும் கலைந்து சென்று நாளை மீண்டும் வருமாறு கூறுகின்றனர் என்றனர்.
கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் 2 உதவி மையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. கோத்தகிரி பகுதியில் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் வரிசையில் காத்திருந்து மீண்டும் ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர். தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்ப பதிவு செய்யப்பட்டது.