வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x

100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

கடலூர்

கடலூர் அருகே திருவந்திபுரத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம் 3 மணியளவில் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், 100 நாள் திட்டத்தில் கடந்த சில மாதங்களாக எங்களுக்கு முறையாக பணி வழங்கவில்லை. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டால், அவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே 100 நாள் திட்டத்தில் பணி வழங்கப்படும் என்று கூறி எங்களுக்கு வேலை வழங்க மறுக்கின்றனர். அதனால் எங்களுக்கு 100 நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைவருக்கும் முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 கிராமங்களை சேர்ந்த பெண்கள், 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story