சிறப்பு வாய்ந்த பயிற்சியை பயன்படுத்தி பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்


சிறப்பு வாய்ந்த பயிற்சியை பயன்படுத்தி பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
x
தினத்தந்தி 2 Sep 2023 6:45 PM GMT (Updated: 2 Sep 2023 6:46 PM GMT)

திறன் மேம்பாடு போன்ற சிறப்பு வாய்ந்த பயிற்சியை பயன்படுத்தி பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

திறன்மேம்பாட்டு பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியை முடித்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கடந்த மாதம் தென்கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 25 பெண்களுக்கு 60 நாட்கள் மர பொம்மைகள், மர சாமான்கள் செய்யும் குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை முடித்த பெண்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் இப்பயிற்சியை வழங்கிய பத்மஸ்ரீ விருது பெற்ற சிறப்பு பயிற்சியாளர் ராஜு என்பவருக்கு நினைவுப் பரிசு ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

புவிசார் குறியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரச்சிற்பங்களை மிக சிறப்பாக செய்து வருகின்றனர். இதனால் மரச்சிற்பத்திற்கான புவிசார் குறியீடு இம்மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பயிற்சி பெற்ற பெண்கள் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். பொம்மைகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து அதற்கு வண்ணம்பூசி, சந்தைப்படுத்தி வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காட்சி அமைக்கப்பட்டு அதில் நீங்கள் செய்த பொருட்களை சந்தைபடுத்தவும் ஏற்பாடு செய்யப்படும். ஆர்வமுடனும் திறமையுடனும் இருக்கும் பயிற்சியாளர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி விரைவில் அளிக்கப்படும்.

தன்னம்பிக்கையோடு

திறன் பயிற்சி என்பது திறமையை வளர்த்துக்கொண்டு, தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கான ஒரு பயிற்சியாகும். இது போன்ற சிறப்பு வாய்ந்த பயிற்சியை பெண்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்டம்(திட்ட இயக்குனர்) சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) விஜயராகவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் நடராஜன், தென்கீரனூர் மகளிர் கிளஸ்டர் பெண் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story