வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள்

வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டனர்.
பெண்கள் எல்லாத்துறைகளிலும் இப்போது வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். 'எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைகாண்' எனும் மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, அவர்கள் சாதனை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.
பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல், உறவுகளை பேணல் என நற்பண்புகள் நிறைந்த தாய்க்குலத்தின் பெருமையை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகளிர் குல மாணிக்கங்கள்
தாய், மனைவி, மகள், சகோதரி, தோழி என உறவின் அனைத்து நிலைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். இந்த பாத்திரங்களில் எதையும் நிராகரித்து எந்த ஆணாலும் வாழ்ந்து விட முடியாது. 'உலகம் அனைத்தையும் கட்டி காப்பாற்றி, அமுதூட்டி வரும் நூல்கள், கலைகள், கலைமன்றங்கள் யாவும் பெண்களே' என்றார் ஷேக்ஸ்பியர். அந்தளவுக்கு உலகில் சிறப்புக்குரியவர்கள் பெண்கள்தான். அதனால்தான் நதிகள் தொடங்கி மலைகள் வரை பெண்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது.
'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்ற நிலையெல்லாம் கடந்து, இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களுக்கே சவால் விடும் பணிகளில் கோலோச்சி வருகிறார்கள். இன்று அவர்கள் தொடாத உயரமே இல்லை, எட்டாத உச்சம் இல்லை. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் இந்த வேளையில், ஆண்களுக்கு இணையாக பல்வேறு துறைகளிலும் கோலோச்சும், சாதனை படைத்து வரும் மகளிர் திலகங்களை இன்றைக்கு பார்க்க இருக்கிறோம். இடர்பாடுகளையும், சிக்கல்களையும் கடந்து சாதனை மங்கைகளாக ஜொலிக்கும் மகளிர் குல மாணிக்கங்களையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் இங்கே காணலாம்.
மன உறுதி வேண்டும்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஷ்யாம்ளா தேவி:- தற்போது பெண்கள் பல்வேறு துறைகளில் திறமையுடன் செயல்பட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் பெண்கள் ஆளும் மாவட்டமாக திகழ்கிறது. இதனால் பெண்களுடைய பிரச்சினைகளை மிக எளிதாகவும், மிக நுட்பமாகவும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் இன்றைய காலகட்டத்திலும், அவர்கள் சில பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதில் போலீசாரை பொறுத்தமட்டில் நாங்கள் மிகப்பெரிய பிரச்சினையாக பெரம்பலூர் மாவட்டத்தில் கருதுவது குழந்தை திருமணம். அதனை தடுப்பதற்காக வாரந்தோறும் திங்கட்கிழமை போலீசார் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்தும், போக்சோ வழக்கு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதையெல்லாம் தவிர்த்து, மன உறுதியோடு இந்த உலகத்தை எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் போலீசாரை அணுகுவதற்கு அனைத்து விதமான உதவிகளை செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தியாகம் செய்கின்றனர்
குன்னம் பகுதியை சேர்ந்த ஆசிரியை ச.புவனேஸ்வரி:- கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து, பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறி வருகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்திலும் பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்கிறதா? என்றால், அது கேள்விக்குறிதான். பல்வேறு தடைகளை தாண்டியே பெண்கள், தங்கள் உரிமைகளை பெற முடிகிறது. இன்றளவும் பெற்றோர், கணவர், குழந்தைகள் போன்றோருக்காக தங்களது கனவுகளை, லட்சியங்களை கைவிட்டு, குடும்பத்திற்காக வாழும் பெண்கள் இருக்கின்றனர். அவர்கள் தங்களது வாழ்க்கையை முழுவதுமாக தியாகம் செய்கின்றனர். சிலர் தங்களின் நியாயமான உரிமைகளை கூட விட்டுக்கொடுத்து விடுகின்றனர். கல்வியில் சிறந்து பல பெண்கள் விளங்கி வேலைக்கு செல்கின்றனர். ஆனால் வேலை செய்யும் இடங்களில் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இன்றும் பெண்களை ஏளனத்துடன் பார்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். சமூகத்தை எடுத்துக்கொண்டால் பெண்கள் அணியும் ஆடையில் கூட குற்றம் காண்பவர்கள் இருக்கின்றனர். ஆனால் இது போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் மனவலிமையுடன் எதிர்கொண்ட பெண்கள்தான் சாதனையாளர்களாக திகழ்கின்றனர் என்பதை மற்ற பெண்களும் மனதில் கொள்ள வேண்டும். எனவே மனஉறுதியுடன் பிரச்சினைகளை எதிர்கொண்டு பெண்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.
திறம்பட செயல்படுகின்றனர்
தா.பழூரை சேர்ந்த குடும்பத்தலைவி ரேவதி:- பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கக்கூடியதற்கான வாய்ப்பு தற்போது உள்ளது. பல பெற்றோர்கள் பெண் குழந்தைகளை, ஆண் குழந்தைகளுக்கு நிகராக வளர்க்கின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். பெண்களுக்கு தற்போது சட்டப்பூர்வமாக கிடைக்கக்கூடிய அனைத்து பாதுகாப்பும் கிடைக்கிறது. பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு இருக்கிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் பெண்கள் மீதான அடக்குமுறை முயற்சி நடக்கத்தான் செய்கிறது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தற்போது இல்லை. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளது. குடும்பங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அதில் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருப்பதை பார்க்க முடிகிறது.
சாதனை படைக்கின்றனர்
அரும்பாவூரை சேர்ந்த ஷர்மிளா பானு:- பல்வேறு துறைகளிலும் பெண்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக அனைத்து பணிகளையும் செய்கின்றனர். ஆண்களுடன் இணைந்து பணி புரியும்போது ஒரு சில இடங்களில் துன்புறுத்தல் இருக்கக்கூடும். ஆனால் அவற்றையெல்லாம் பெண்கள் தற்போது துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகின்றனர். ஆண்களையும் மிஞ்சி சாதனை படைத்து வருகின்றனர். நான் பணிபுரியும் நிறுவனத்தில் பெண்கள் மட்டுமே பணிபுரிவதாலும், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதாலும் எந்த நேரமும் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால் பஸ்களில் பயணம் செய்யும்போது கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில், இன்றளவும் பெண்கள் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவற்றையும் பெண்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு, மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும்.
குடும்பத்திற்கே முன்னேற்றம்
விக்கிரமங்கலத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி கொடி ஞானம்:- இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் பெண்களின் நிலை ஒவ்வொரு நாளும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. எங்களைப் போன்றவர்கள் அதிகம் படிக்காமல் போனதற்கு அன்றைய காலகட்டத்தில் சரியான விழிப்புணர்வு இல்லாதது ஒரு காரணம். அந்த காலத்தில் கிராமப்புறங்களில் பெண்களை படிக்க வைப்பதோ, வேலைக்கு அனுப்புவதோ மிக மிகக் குறைவாக அங்கொன்றும், இங்கொன்றுமாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று மாறிவரும் கால சூழ்நிலையில் கிராமப்புறங்களில் பெண் பிள்ளைகள் தான் அதிகமாக படிக்கின்றனர். அதனோடு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். ஒரு பெண் படித்தால் அந்த குடும்பம் முழுவதும் நல்ல முன்னேற்றம் அடைந்து விடும் என்பதை இந்த சமூகம் உணர்ந்து கொண்டதால், பெண்கள் அதிகமாக படித்து முன்னேறி வருகின்றனர். பெண்கள் அதிகமாக படித்து வருவதால் இன்னும் சிறிது காலத்திற்கு பின்பு விவசாய மற்றும் கூலி வேலைகளை செய்வதற்கு பெண்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டுப் பெண்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதே வேலையில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு என்று தனி கலாச்சாரமும், பண்பாடும் உள்ளது. அது எந்த சூழ்நிலையிலும் சிதைந்து விடாதபடி வருங்கால பெண்கள் பாதுகாத்திட வேண்டும்.
சாதனையாளர்கள்
ராவுத்தன்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுமதி:- இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வரலாம். ஆனால் இன்றளவும் தங்களது குடும்பத்திற்காக, தங்களது கனவு, லட்சியங்களை விடுத்து வாழக்கூடிய பெண்களும் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் பெண்களும் உள்ளனர். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருடமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். இதுவரை அரியலூர் நகரில் எந்த ஒரு ஆட்டோ ஸ்டாண்டிலும் எனது ஆட்டோவை நிறுத்த அனுமதிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். எனக்கு ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்த அனுமதி வழங்கினால், எனது குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். இருப்பினும் ஆட்டோ ஓட்டுவதன் மூலம் எனக்கு போதுமான வருவாய் கிடைக்கிறது. பெண்கள் அதிக அளவில் எனது ஆட்டோவில் விரும்பி பயணம் செய்கின்றனர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப்போன்று எத்தனையோ பெண்கள் உழைக்கின்றனர். அவர்களும் சாதனையாளர்கள் தான்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






