அரசிடம் இருந்து மாதம் தோறும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு ரூ.1,000 கிடையாது-அமைச்சர் கீதாஜீவன் பேட்டி


அரசிடம் இருந்து மாதம் தோறும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு ரூ.1,000 கிடையாது-அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
x

அரசிடம் இருந்து மாதம் தோறும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடையாது என்று திருச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

திருச்சி

ஆய்வுக்கூட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட அலுவலர்களுடனான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமை தாங்கினார்.

அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் வே.அமுதவல்லி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பணிகள் இயக்குனர் சந்திரகலா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குனர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

சர்வர் கோளாறு

தமிழகம் முழுவதும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு ரூ.1,000 கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இ-சேவை மையங்களில் முதல் இரண்டு நாட்களில் பெண்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தற்போது சர்வர் கோளாறு உள்ளிட்டவை சரி செய்யப்பட்டு மகளிர் உரிமைத்தொகை தொடர்பான பணிகள் தொய்வின்றி விரைவாக நடைபெற்று கொண்டு வருகிறது. இ-சேவை மையங்கள் மூலம் நடைபெறும் சிறப்பு முகாம்களே தற்போது போதுமானது.

உதவித்தொகை பெற்றால் கிடையாது

ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை போன்ற அரசின் மாதாந்திர உதவித்தொகைகள் பெறும் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடையாது. ஆதார் எண், வங்கி கணக்கு எண் இணைப்பில் உள்ள தவறு காரணமாக சிலருக்கு மாற்று வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கியில் பணம் பிடித்தால் அதை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். குறைவான ஊதியம் வாங்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் வருமானம் வருகிறது என்று குறுந்தகவல் வருவதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்தால், பரிசீலனை செய்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

குளறுபடிகள் சரிசெய்யப்படும்

இது ஒரு மிகப்பெரிய திட்டம். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது சில குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். அவை விரைவில் சரிசெய்யப்படும். அதற்குதான் கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அதிக வருமானம் பெறுபவர்களுக்கு இந்த ரூ.1,000 என்பது மிக பெரிதாக இருக்காது. அதனால் தகுதி வாய்ந்த பெண்களுக்கு ரூ.1,000 தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.கூட்டத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி மற்றும் 6 மாவட்ட அதிகாரிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story