கணவர் குடும்பத்தாரிடமிருந்து குழந்தையை மீட்டுத்தரக்கோரி போலீஸ் நிலையத்தில் பெண் தர்ணா போராட்டம்
கணவர் குடும்பத்தாரிடமிருந்து குழந்தையை மீட்டுத்தரக்கோரி போலீஸ் நிலையத்தில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மானியம் அடுத்த சாலூர் மண்டலம் பகுதியை சேர்ந்தவர் பத்மஜா. இவருக்கும் திருவள்ளூர் ஆசூரி தெருவைச் சேர்ந்த சுதர்சனம் என்பருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணமான நிலையில் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை பிறந்து 43 நாட்களில் சுதர்சனம் வீட்டார் பத்மஜாவை ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
எனவே குழந்தையை பார்க்கவும், பராமரிக்கவும் அனுமதிக்கும்படி பலமுறை கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டும் அனுமதிக்காததால், குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு கொடுத்தார். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் இந்த புகாரை விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று பத்மஜா குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பத்மஜாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.