பள்ளிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்


பள்ளிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
x

காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை

பாடப்புத்தகங்கள்

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி முடிவடைந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித உபகரணங்கள் சென்னையில் இருந்து வந்தன. அவை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ளன. 2-ம் பருவ பாடப்புத்தகங்களானது 1 முதல் 7-ம் வகுப்பு வரை வந்துள்ளது.

3-ந் தேதி பள்ளிகள் திறப்பு

மாவட்டத்தில் 1,080 தொடக்கப்பள்ளிகள், 220 நடுநிலைப்பள்ளிகள், 120 மேல்நிலைப்பள்ளிகள், 134 உயா்நிலைப்பள்ளிகளில் சுமார் 86 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வந்தது.

இதனை அந்தந்த பள்ளிகளுக்கு லாரிகள் மற்றும் சரக்கு வேன்களில் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல கணித உபகரணங்களும் அனுப்பி வைக்கப்படுகிறது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வருகிற 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

அன்றைய தினம் மாணவர்கள் கையில் புத்தகங்கள் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


Next Story