செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்


செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
x

அரவக்குறிச்சி அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் சமாதானம் செய்தனர்.

கரூர்

தற்கொலை மிரட்டல்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கோவிலூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ரேணுகாதேவி என்ற மனைவியும், யுவஸ்ரீ, ஓவியா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் பாஸ்கர் தொடர்ந்து மத்திய அரசின் இலவச வீடு கேட்டு பல தடவை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த பாஸ்கர் மத்திய அரசின் இலவச வீடு கேட்டு நேற்று மாலை அப்பகுதியில் சுமார் 140 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போலீசார் பாஸ்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பாஸ்கர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து தானே கீழே இறங்கி வந்தார். அப்போது போலீசார் பாஸ்கரிடம் உங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்து கூறப்படும், அதுவரை இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என அறிவுரை கூறி, குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story