விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கூடலூரில் அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் புகழேந்திரன் (வயது 58). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவரது தம்பி ஜெய்சங்கர் (வயது 53). தொழிலாளி. மேலும், இவர் கூடலூர் கூடலூரில் உள்ள சில வக்கீல்களின் உதவியாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார். இதனால் அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் ஜெய்சங்கர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 29-ந் தேதி வீட்டில் ஜெய்சங்கர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஜெய்சங்கர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் கூடலூர் இந்திரா நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.