முன்விரோத தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை
பொன்னமராவதி அருகே முன்விரோத தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனூர் ஊராட்சி கருகப்பூலாம்பட்டியை சேர்ந்தவர் ரங்கையா (வயது 55). தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பையா மகன் வடிவேலு (35) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 1-ந் தேதி கருகப்பூலாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மஞ்சுவிரட்டு திடலில் ரங்கையா நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வடிவேலு, ரங்கையாவின் கழுத்தில் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரங்கையா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பொன்னமராவதி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, தப்பியோடிய வடிவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.