தொழிலாளி கத்தரிக்கோலால் குத்திக்கொலை


தொழிலாளி கத்தரிக்கோலால் குத்திக்கொலை
x

சிதம்பரம் அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்

சிதம்பரம் அருகே உள்ள வடகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் கருணைநாதன் (வயது 55), கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அப்பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது விழாவுக்காக அங்கு கட்டப்பட்டிருந்த சாமியானா பந்தலை அதே பகுதியை சேர்ந்த நல்லகுமார் மகன் நெடுமாறன் (22) தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதை கருணைநாதன் மகன் மாயவன் (35) தட்டிக்கேட்டார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அப்பகுதி பொதுமக்கள் தகராறை விலக்கி விட்டு, இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

கத்தரிக்கோல் குத்து

இருப்பினும் ஆத்திரம் தீராத நெடுமாறன், தனது அண்ணன்கள் நேதாஜி (28), நெடுஞ்செழியன் (24) மற்றும் ஆதரவாளர்களான கு.கொளக்குடியை சேர்ந்த கமலஹாசன் மகன் சஞ்சய் (21), வடகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜாராமன் மகன் பூவேந்திரன் (32), அமிர்தலிங்கம் மகன் அமிர்தராஜ் (42), பூ.கொளக்குடியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோரு டன் இரவு நேரத்தில் மாயவன் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த மாயவனுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். மேலும் இதை தடுக்க முயன்ற மாயவனின் சகோதரர்கள் மோகனசுந்தரம் (28), மகேஷ்குமார் (31) ஆகியோரையும் அவர்கள் தாக்கி கத்தரிக்கோலால் குத்தியுள்ளனர்.

தொழிலாளி கொலை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கருணைநாதன், தகராறை விலக்கி விட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கத்தரிக்கோலால் கருணைநாதனையும் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கருணைநாதன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான கருணைநாதன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

7 பேர் கைது

இதுகுறித்து மாயவன், மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நெடுமாறன், நேதாஜி, நெடுஞ்செழியன், சஞ்சய், பூவேந்திரன், அமிர்தராஜ் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

பொங்கல் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story