"தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு!" முன்னெடுப்பு - சீமான் அறிவிப்பு


தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு! முன்னெடுப்பு - சீமான் அறிவிப்பு
x

"அன்னைத் தமிழில் அர்ச்சனை" என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"அன்னைத் தமிழில் அர்ச்சனை" என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு (அர்ச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் அறிந்த வரை இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

நாடு "தமிழ்"நாடு. ஆனால், தமிழில் வழிபாடு செய்யப் போராட வேண்டிய நிலையில் தான் கடந்த 55-ஆண்டுக் காலத் திராவிட அரசுகள் இயங்கி இருக்கின்றன. இந்நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கவும், மக்களும் தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் "தாய்த்தமிழில் வழிபாட்டை" முன்னெடுக்கிறது.

தமிழ்நாடு முழுவதிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தொகுதி, மாவட்ட, நாடாளுமன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் இணைந்து இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு முதன்மைக் கோயிலுக்குத் தத்தம் குடும்பங்களுடன் சென்று தமிழில் வழிபாடு செய்யக் கோரி, கோவில் பொறுப்பாளர்களையும் (நிருவாகத்தையும்) பூசாரிகளையும் நடைமுறையில் தமிழ் வழிபாட்டைச் செய்ய வைக்க வேண்டும்.

இதனை, தமிழுக்காக 1965-இல் பெரும் மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான செப்டம்பர் 3-ஆம் நாளன்று தமிழ்நாடு முழுவதிலும் முன்னெடுப்போம். இதை ஒரு நாள் நிகழ்வாக மட்டுமில்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம், கட்சிப் பொறுப்பாளர்கள் இணைந்து குடும்பங்களுடன் அருகில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று தமிழில் வழிபாடு செய்வதை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story