சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஸ்தம்பித்தது ஏற்காடு


சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஸ்தம்பித்தது ஏற்காடு
x

கோடை விழா, மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஏற்காடு நகரம் ஸ்தம்பித்தது.

சேலம்

ஏற்காடு:

கோடை விழா, மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஏற்காடு நகரம் ஸ்தம்பித்தது.

கோடை விழா

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 25-ந் தேதி தொடங்கிய கோடை விழா, மலர் கண்காட்சியை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

அவர்கள் அண்ணா பூங்காவில் உள்ள லட்சக்கணக்கான மலர்களையும், மேட்டூர் அணை, மாட்டு வண்டி, வள்ளுவர் கோட்டம், அரசு பஸ் என பல்வேறு மலர் அலங்காரங்களையும், காய்கறி அலங்காரங்களையும் கண்டு ரசித்து செல்கிறார்கள். மேலும் ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்கிறார்கள்.

ஸ்தம்பித்தது ஏற்காடு

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று கோடை விழா, மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்தனர்.

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஏற்காடு நகரமே ஸ்தம்பித்தது. சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கார், வேன், பஸ், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் வந்ததால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றிருந்ததை காணமுடிந்தது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதால் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு வர சுமார் 5 மணி நேரம் ஆனது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்களை இயக்க கடும் சிரமம் ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு

மேலும் ஏற்காட்டில் இருந்து சேர்வராயன் கோவிலுக்கு சாதாரண நாட்களில் 15 நிமிடங்களில் சென்று விடலாம். ஆனால் நேற்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சுமார் 3 மணி நேரம் ஆனதாக சுற்றுலா பயணிகள் கூறினார்கள். மேலும் நேற்று அண்ணா பூங்கா, படகு இல்லத்தில் கூட்டம் அலைேமாதியது.

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஏற்காட்டில் உள்ள சாலையோர கடைகள், ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடந்தது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story