உங்களுக்கு கடவுளை பிடிக்காது.. ஆனால் அந்த கடவுளுக்கே உங்களை பிடிக்கும் - கலைஞரிடம் கூறியதாக ரஜினிகாந்த் பேச்சு


உங்களுக்கு கடவுளை பிடிக்காது.. ஆனால் அந்த கடவுளுக்கே உங்களை பிடிக்கும் - கலைஞரிடம் கூறியதாக ரஜினிகாந்த் பேச்சு
x

கருணாநிதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனது பாக்கியம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை,

சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜனிகாந்த் கலந்து கொண்டார். விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 1974-ல் இருந்து எனக்கு தெரியும். பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

எம்.ஜி.ஆர்., சிவாஜியை தனது எழுத்தால் உச்ச நடிகர்களாக்கினார் கருணாநிதி. மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் படங்கள் மூலமாக கிடைத்த வருமானத்தை கொண்டு சென்னை கோபாலபுரத்தில் வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் இறுதிகாலம் வரை எளிமையாக வாழ்ந்தார். அவரை போல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்.

கருணாநிதி சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்ஜிஆர் களையும் சிவாஜி களையும் உருவாக்கி இருப்பார். ஆனால் சினிமா உலகம் கொடுத்து வைக்கவில்லை. அவரை அரசியல் எடுத்துக்கொண்டது.

தன்னை விமர்சனம் செய்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர் கருணாநிதி. தன்னை மிக மோசமாக விமர்சனம் செய்த பத்திரிக்கையாளரை நலம் விசாரித்தே, தலை வணங்கச் செய்தவர் கருணாநிதி. அந்த பத்திரிகையாளர் பெயர் சோ ராமசாமி.

பொதுக்கூட்டத்தில் அவரை விமர்சனம் செய்த கட்சிக்காரரை கண்டித்து அடக்கியவர் எம்.ஜி.ஆர். கடவுள் நம்பிக்கைக்காரரான ஆன்மிகவாதி சத்திய சாய்பாபா, கருணாநிதியை வீடு தேடி சென்று சந்தித்து பேசினார். எல்லாவற்றையும் விட தேர்தலின் போது இரட்டை இலைக்கு ஒரு முன்னணி நடிகர் ஓட்டு போட்டார். ஆனால் அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டது தெரிந்தும் அவரது புதிய படத்தை பார்க்க கருணாநிதி அவருக்கு அழைப்பு விடுத்தார்.

குளிர் ஜுரம் என்று சொல்லியும் அந்த நடிகரை கட்டாயமாக அழைத்து படத்தைப் பார்த்தார். அந்த நடிகர் நான்தான். சூரியன் பக்கத்தில் அமர்ந்தால் குளிர் ஜூரம் போய்விடும் என்று நகைச்சுவையாக அவர் அன்று பேசியதை என்னால் மறக்கவே முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனது பாக்கியம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story