இளைஞர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு


இளைஞர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 17 Nov 2022 6:50 PM GMT (Updated: 17 Nov 2022 7:12 PM GMT)

இன்றைய சூழலில் இளைஞர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என விருதுநகர் முதலாவது புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர்

இன்றைய சூழலில் இளைஞர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என விருதுநகர் முதலாவது புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

புத்தகத் திருவிழா

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்நகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலாவது புத்தகத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

கண்காணிப்பு

முன்பெல்லாம் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம். வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் ஒவ்வொருத்தர் கண்காணிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று ஒவ்வொருத்தருக்கும் தனி அறை. அறையில் சென்று பூட்டி கொள்கிறார்கள். கையில் செல்போனை கொண்டு சென்றவுடன் பெற்றோரை விட்டும் உடன்பிறந்தவரை விட்டும் நண்பர்களை விட்டும் வெளியே சென்று விடுகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் பேஸ்புக் தான் உயிர் நாடியாக உள்ளது. நம் முன்னோரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இம்மாதிரியான புத்தகத் திருவிழா நடத்த தேவையான உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். இளைஞர்களை தற்கால சூழலில் இருந்து பாதுகாக்கும் சக்தி புத்தகங்களுக்கு தான் உள்ளது. எனவே இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாராட்டு

இந்த விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது, பள்ளி செல்லா குழந்தைகளை கையைப் பிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் பிடியரசி மூலம் தொடங்கப்பட்ட பள்ளி வளாகத்தில் இந்த புத்தகத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ள மாவட்ட நிர்வாகத்தை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கினார். அதில் நானும் பங்கேற்க வாய்ப்பு தந்தார். 12 லட்சம் புத்தகங்கள் அங்கு உள்ளன. அவர் வழிகாட்டிய பாதையில் தற்போது தமிழக முதல்-அமைச்சரும் மாவட்டம் தோறும் இந்த புத்தகத் திருவிழாவை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கான 9488400438 என்ற வாட்ஸ்அப் எண்ணை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் தங்கபாண்டியன், சிவகாசி ஜி அசோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் திட்ட இயக்குனர் திலகவதி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story