ராமநாதபுரம் கோர்ட்டுக்கு கஞ்சா எடுத்து வந்த வாலிபர் கைது
ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் நடத்திய சோதனையின்போது நண்பனுக்காக கஞ்சா கொண்டு வந்த வாலிபர் சிக்கினார். அவரை ேபாலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் நடத்திய சோதனையின்போது நண்பனுக்காக கஞ்சா கொண்டு வந்த வாலிபர் சிக்கினார். அவரை ேபாலீசார் கைது செய்தனர்.
பலத்த சோதனை
ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட வந்த ராமநாதபுரம் சிவஞானபுரத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரை ஆர்.எஸ்.மடையை சேர்ந்த கொக்கி குமார் என்பவர் கத்தியால் வெட்டினார். நீதிபதியின் விசாரணை அறையில் வைத்து நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோர்ட்டில் விசாரணைக்கு வரும் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒருவழியில் நீதிபதிகள், வக்கீல்கள், பணியாளர்கள் என சென்று வரவும், மற்றொரு வழியில் கைதிகள், விசாரணைக்கு வருபவர்கள் வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கைதிகள், விசாரணைக்கு வருபவர்கள் அனைவரும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கஞ்சாவுடன் சிக்கினார்
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் போலீசார் கோர்ட்டு வளாகத்தில் உள்ளே நுழைபவர்களை சோதனையிட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த வாலிபர் ஒருவரை சோதனையிட்டபோது அவர் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது ெதரியவந்தது. போலீசார் கஞ்சாவை கைப்பற்றி அவரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணார்பட்டி எல்.எப்.ரோடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற பாலா (வயது 28) என்பதும், கொலை முயற்சி வழக்கில் கைதாகி வெளியில் வந்த இவர் வழக்கு விசாரணைக்காக வந்திருப்பதும் தெரியவந்தது. சிறையில் இருக்கும் நண்பரான மரக்கடை மணிவண்ணனுக்காக கஞ்சா வாங்கி வந்ததாகவும் பாலமுருகன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.