முதியவரிடம் ரூ.7½ லட்சத்தை மோசடி செய்த வாலிபர் கைது


முதியவரிடம் ரூ.7½ லட்சத்தை மோசடி செய்த வாலிபர் கைது
x

நிதி நிறுவனம் நடத்துவதாக முதியவரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

ஆசை வார்த்தை கூறி...

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை கிராமம், பட்டுசாலியர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 67). இவரிடம் கும்பகோணம் தாலுகா, திருப்புறம்பியம் கீழத்தெருவை சேர்ந்த ராஜசேகரன் மகன் சுதாகர் (32), பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கல்லை கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (36) ஆகியோர் தாங்கள் "விடியல் நிதி மேலாண்மை" என்கிற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் 5 சதவீத வட்டி தொகையுடன் கூடுதலாக இரட்டிப்பு தொகையாக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய சாமிநாதன் அவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி முதல் பல்வேறு தவணைகளில் தனது மகனின் கூகுள் பே மூலம் மொத்தம் ரூ.7 லட்சத்து 60 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் சாமிநாதன் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி பணமும், கூடுதல் இரட்டிப்பு பணமும் கொடுக்காமல் சுதாகரும், சந்தோஷ்குமாரும் ஏமாற்றி வந்துள்ளனர்.

கைது

மேலும் சாமிநாதன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போதும், அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், குற்றப்பிாிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் மீரா பாய் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாகி இருந்த சுதாகரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்தோஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிரிவு போலீசாரை பாராட்டினார்.


Next Story