கத்தி முனையில் தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
திண்டிவனம் அருகே கத்தி முனையில் தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்தனர்.
திண்டிவனம்
திண்டிவனம் தாலுகா கீழ் ஆதனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்(வயது 55). தொழிலாளியான இவர் நேற்று காலை திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி சேகரின் சட்டைபையில் இருந்த ரூ.2,100-ஐ பறித்தார். இதனால் திடுக்கிட்ட அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர் தன்னிடம் இருந்த இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னா் இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்திமுனையில் சேகரை தாக்கி பணம் பறித்தவர் திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டையை அடுத்த சிங்கனூர் புதுகாலனியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் எறும்பு என்கிற ரமேஷ் குமார்(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.