திருத்தணி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருத்தணி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் போலியான முத்திரையை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல் கொள்முதல் நிலையம்
திருத்தணி அடுத்த வேலஞ்சேரியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கள் ஏதும் இல்லாமல் ஆந்திராவில் இருந்து கொண்டு வரும் நெல் மூட்டைகளை முறைகேடாக வேலஞ்சேரியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சிலர் விற்பனை செய்வதாக கடந்த 1-ந் தேதி திருத்தணி தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
முறைகேடு
இதனையடுத்து தாசில்தார் வெண்ணிலா வேலஞ்சேரியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திருத்தணி அடுத்த அலமேலுமங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவர் நெல் கொள்முதல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் வழங்கியதாக அளித்த அடங்கலில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அடங்கலில் அலமேலுமங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து மற்றும் முத்திரை போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.
கைது
இதுகுறித்து திருத்தணி தாசில்தார் வெண்ணிலா திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குருநாதனின் நில அடங்கல்களை அவருடைய உறவினரான திருத்தணி அடுத்த பி.சி.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 27) என்பவர் தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.