மாணவர்களை கத்தியால் குத்தி பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

கோவை ராமநாதபுரத்தில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் மாணவர்களை குத்தி செல்போன்-பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரம்
கோவை ராமநாதபுரத்தில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் மாணவர்களை குத்தி செல்போன்-பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
செல்போன்கள் பறிமுதல்
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் நஷீப் (வயது 22). இவர் தனது நண்பர்களான ஹக்கீம், சாகுல், சிவன் மற்றும் தர்மபுரியை சேர்ந்த அருண் ஆகியோருடன் கோவை புலியகுளம் பெரியார் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்து தனியார் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கினார்கள். அப்போது உள்ளே புகுந்த 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியும், நஷீப் உள்ளிட்ட 2 பேரை கையில் கத்தியால் குத்தியும் அவர்கள் வீட்டில் இருந்த விலை உயர்ந்த 5 செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அந்த செல்போன்களின் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
இது குறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் சண்முகம் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், போலீசார் ராஜேஷ், லோகேஷ், பிரசாத்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில், புலியகுளம் விநாயகர் கோவில் அருகே உள்ள ஒரு செல்போன் கடையில், மர்ம ஆசாமி பழைய செல்போன்களை விற்பனை செய்ய காத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வாலிபர் கைது
இதையடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (23) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெயராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெரியார் நகரில் கத்தி, வாள் ஆகியவற்றை பயன்படுத்தி கல்லூரி மாணவர்களை குத்தியும், மிரட்டியும் செல்போன்கள், பணத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெயராஜை போலீசார் கைது செய்தனர்.
வாள் பறிமுதல்
அவரிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு வாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயராஜின் நண்பர்களான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் செய்த சில மணி நேரத்திலேயே ஒருவரை கைது செய்து, அவரிடம் இருந்து செல்போன்கள், வாளை பறிமுதல் செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.






