மதுகுடிக்க பணம் தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுகுடிக்க பணம் தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உத்திரமேரூர் கேதாரீஸ்வரன் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் அழகரசன் என்கிற யோகி (வயது 30). சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். இவர் தனது பாட்டி பத்மாவதியுடன் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்து 6 மாதத்திற்குள் மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த இவர் நிரந்தரமான வேலை எதுவும் இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று பாட்டியிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார்.
அவர் பணம் தர மறுக்கவே மனமுடைந்த நிலையில் பாட்டியின் சேலையை எடுத்து வீட்டில் தூக்குப்போட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பத்மாவதி உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.