கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை


கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

குத்தாலம் அருகே கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கப்பூர் மேலத்தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 31). இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு, மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவன கிளையில் ரூ.8 லட்சம் கடன் பெற்று, வாடகைக்கு விட்டு தொழில் செய்யும் நோக்கில் அறுவடை எந்திரம் வாங்கியுள்ளார்.ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்காத நிலையில், கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் வினோத்குமார் காணப்பட்டுள்ளார்.

இதனிடையே அவரது குடும்பத்தார் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் இது குறித்து வினோத்குமார் குடும்பத்தார் கூறுகையில் கடந்த ஜூலை மாதம் வரை 6 மாதங்களுக்கான தவணைத்தொகை கட்டாமல் நிலுவையில் இருந்த நிலையில் அதன் பின்னர் மொத்தமாக நிலுவைத் தொகையை செலுத்திவிட்டதாகவும் ஆகஸ்டு மாதத்துக்கான நிலுவைத் தொகை மட்டுமே உள்ளது.

உரிய நடவடிக்கை

கடந்த சில நாட்களாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு வந்து வினோத்குமாரின் மனைவி மற்றும் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் நிதி நிறுவன ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர். இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் அண்ணன் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இறந்த நபர் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்ததாகவும் அவர்கள் திருப்பி செலுத்த தந்த அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் வினோத்குமார் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததன் பேரில் உடலை பெற்று சென்றனர்.


Next Story