அ.தி.மு.க. அலுவலகத்தில் விண்ணப்பம் திருநங்கை அப்சரா ரெட்டி கொளத்தூரில் போட்டியிட விருப்ப மனு


அ.தி.மு.க. அலுவலகத்தில் விண்ணப்பம் திருநங்கை அப்சரா ரெட்டி கொளத்தூரில் போட்டியிட விருப்ப மனு
x
தினத்தந்தி 2 March 2021 3:39 AM GMT (Updated: 2 March 2021 3:39 AM GMT)

அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ‘கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கினால், தேர்தலில் போட்டியிட்டு மு.க.ஸ்டாலினை தோற்கடிப்பேன்' என்று அவர் கூறினார்.

சென்னை, 

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வினியோகம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. 6-வது நாளான நேற்று அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘அ.தி.மு.க. தலைமை கொளத்தூரில் எனக்கு வாய்ப்பு அளிக்கும்பட்சத்தில், மு.க.ஸ்டாலினை என்னால் தோற்கடிக்க முடியும். அந்த நம்பிக்கையும், சக்தியும் எனக்கு உண்டு. அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். திருநங்கைகளுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில்தான்' என்றார்.

அ.தி.மு.க. இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் டாக்டர் டி.சேதுபதி, விருத்தாசலம் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தார். அதேபோல பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்தனர். வில்லிவாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் போட்டியிடுவதற்கு தலா 10 மனுக்களை அத்தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் தாக்கல் செய்தனர்.

ந.சேதுராமன் சந்திப்பு

முன்னதாக அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் ந.சேதுராமன் நேற்று சந்தித்தார். அப்போது கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடந்தது.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியேவந்த அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.தேவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் நீடிக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாகவே நடந்தது. காரைக்குடி, சிவகங்கை, திருவாடானை, மதுரை வடக்கு, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராமநாதபுரம், கடையநல்லூர் ஆகியவற்றில் ஏதேனும் 3 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம். விரைவில் முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story