கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராமல் அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிக்க காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்


கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராமல் அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிக்க காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 2 March 2021 3:44 AM GMT (Updated: 2 March 2021 3:44 AM GMT)

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராமல், அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிப்பதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, 

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. 41 இடங்களில் போட்டியிட்டு, 29 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்த தே.மு.தி.க. 7.9 சதவீத வாக்குகளையும் கைப்பற்றியது.

ஆனால், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் 3-வது அணியாக உருவெடுத்த மக்கள் நலக்கூட்டணிக்கு தே.மு.தி.க. தலைமை தாங்கியது. 104 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கிய தே.மு.தி.க. ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.

தே.மு.தி.க. கோரிக்கை

தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க., தொடர்ந்து அந்தக் கூட்டணியிலேயே நீடித்து வருகிறது. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை வழங்கியுள்ளது.

ஆனால், பா.ம.க.வுடன் திரை மறைவு பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தொடங்கியபோதே, கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும், தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அ.தி.மு.க. அதை கண்டுகொள்ளவில்லை.

அ.தி.மு.க. தூது

ஆனால், பா.ம.க.வுடன் கடந்த மாதம் 27-ந்தேதி கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்ட நிலையில், அன்று இரவு தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வருவதாக அ.தி.மு.க. தூது அனுப்பியது. அதை தே.மு.தி.க. கண்டுகொள்ளவில்லை.

தே.மு.தி.க. பொருளாளராக இருந்த பிரேமலதா விஜயகாந்த், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற நிலையில், தகவல் கிடைத்தும் சென்னை திரும்பவில்லை. இதேபோல், தே.மு.தி.க. துணைச் செயலாளரான எல்.கே.சுதீசும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவில்லை.

அமைச்சர்கள் வருகை

இந்த நிலையில், அன்று (27-ந்தேதி) இரவு அ.தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்றனர். ஆனால், அங்கு உடல்நலிவுற்ற நிலையில் ஓய்வு எடுத்துவரும் விஜயகாந்த் மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சூழ்நிலையை புரிந்துகொண்டு அவர்களும் விஜயகாந்தை மட்டும் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மின்துறை அமைச்சர் தங்கமணியை அவரது இல்லத்தில், தே.மு.தி.க. அவைத் தலைவர் இளங்கோவன், துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதால், அதைவிட அதிகமான தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு வழங்க வேண்டும் என்றும், பா.ம.க.வுக்கு வட மாவட்டங்களில் மட்டும்தான் செல்வாக்கு இருப்பதாகவும், தங்களுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். ஆனால், அ.தி.மு.க. தரப்பில் 14 இடங்கள் மட்டுமே தரப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.

அரசியலில் பரபரப்பு திருப்பம்

என்றாலும், நேற்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர அமைச்சர் பி.தங்கமணி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தே.மு.தி.க. தரப்பில் இருந்து யாரும் செல்லவில்லை. அதற்குள் தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பம் அரங்கேறியுள்ளது.

அதாவது, தற்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு அதிகமாக கேட்கிறது. ஆனால், தி.மு.க. தரப்பில் 25 தொகுதிகள் வரைதான் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ராகுல்காந்தி தமிழக வருகையால் அவருடன் இருந்த காங்கிரஸ் தலைவர்கள், நாளை (புதன்கிழமை) தான் மீண்டும் பேச வருவதாக தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. விட்ட தூது

அதற்குள், தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி உறவினர் ஒருவர், தே.மு.தி.க.வுக்கு நேற்று தூது சென்றதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியேறினால், உங்களை (தே.மு.தி.க.) கூட்டணிக்கு அழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.

அதனால், அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தைக்கு செல்லாமல், தே.மு.தி.க. பின்வாங்கியுள்ளது. காங்கிரஸ் எடுக்கப்போகும் முடிவை வைத்தே, தே.மு.தி.க. தனது முடிவை எடுக்கப்போவதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story