கன்டெய்னர்களில் அலுவலக அறைகள்: சினிமா பாணியில் தேர்தல் பணிமனை நடிகை குஷ்பு அசத்தல்


கன்டெய்னர்களில் அலுவலக அறைகள்: சினிமா பாணியில் தேர்தல் பணிமனை நடிகை குஷ்பு அசத்தல்
x
தினத்தந்தி 3 March 2021 3:40 AM GMT (Updated: 3 March 2021 3:40 AM GMT)

சினிமா பாணியில்,கன்டெய்னர்களில் அலுவலக அறைகள் அமைத்து தேர்தல் பணிமனையை வடிவமைத்து நடிகை குஷ்பு அசத்தி உள்ளார்.

சென்னை, 

தேர்தல் திருவிழா என்றாலே அரசியல்வாதிகள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடும். தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். பொதுவாக, தேர்தல் நேரங்களில் ஆங்காங்கே தற்காலிக தேர்தல் பணிமனைகள் (காரியாலயங்கள்) அமைத்து அந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு அந்த தொகுதியில் தேர்தல் பணிமனை ஒன்றை அமைத்துள்ளார்.

வித்தியாசமான வடிவமைப்பு

இதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. அருகே, 9 கிரவுண்ட் இடத்தில் நடிகை குஷ்பு தனது தற்காலிக தேர்தல் பணிமனையை அமைத்து உள்ளார். நடிகை குஷ்பு சினிமா துறையில் இருந்து வந்ததால், தனது தேர்தல் பணிமனையை சினிமா பாணியில் முற்றிலும் வித்தியாசமாக வடிவமைத்து உள்ளார். சினிமா என்றாலே செட்டிங்குக்கு பெயர் போன துறை ஆகும். அதன்படி, நடிகை குஷ்புவும் தனது தேர்தல் பணிமனையை 4 கன்டெய்னர்களை கொண்டு செட்டிங் செய்து அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் அசத்தி இருக்கிறார். தேர்தல் பணிமனையின் முகப்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் என்ற பெயருடன் நடிகை குஷ்புவின் படமும் பளிச்சிடுகிறது.

கன்டெய்னர்களில் உருவாக்கப்பட்ட அறைகள்

4 கன்டெய்னர்களில் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கன்டெய்னரும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டு கழிவறை மற்றும் இருக்கை வசதி கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு கன்டெய்னரில் நடிகை குஷ்புவின் அலுவலகம் செயல்படுகிறது. மற்ற 3 கன்டெய்னர்களில் உள்ள அறைகளிலும் தொகுதி நிர்வாகிகளுக்கு தனித்தனி அறை வசதி செய்யப்பட்டுள்ளது. தனியாக தொலைபேசி, இணையதள வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பணிமனை வளாகத்தில், பெரிய சாமியானா பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து கூட்டம் நடத்தும் வகையில் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், மின்விசிறி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கட்சி தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்

நடிகை குஷ்பு தினமும் காலையில், இந்த தேர்தல் பணிமனைக்கு வந்து, அங்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். தேர்தல் பணிகள் தொடர்பாகவும் விவாதித்து வருகிறார். சென்னை அண்ணா சாலையில், இவ்வளவு பிரமாண்டமாக கட்சி அலுவலகம் அமைந்திருப்பது அந்த வழியாக செல்பவர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றால் அது மிகை அல்ல.

Next Story