தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்? பரபரப்பு தகவல்கள்


தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 3 March 2021 9:14 AM IST (Updated: 3 March 2021 9:14 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைசிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன.இந்த கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி?

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலைப் போல 41 தொகுதிகளை கேட்டுவருகிறது. ஆனால், அதில் 9 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதை சுட்டிக்காட்டி தி.மு.க. மறுத்து வருகிறது. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 20 முதல் 22 இடங்கள் வரை வழங்கலாம் என்று தி.மு.க. கருதுகிறது.இதேபோல், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான ம.தி.மு.க. மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் வழங்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

திருச்சி பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல்?

ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல், விடுதலைசிறுத்தைகள் கட்சியிலும் 10 தொகுதிகள் வரை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, கூட்டணி கட்சிகளிடையே சமரசம் செய்யும் முயற்சியில் தி.மு.க. இறங்கியுள்ளது.

விரைவாக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர்களை அறிவிக்கவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அனேகமாக திருச்சியில் 7-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story