234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக உழைக்க வேண்டும் பா.ம.க.வினருக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்


234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக உழைக்க வேண்டும் பா.ம.க.வினருக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 March 2021 4:10 AM GMT (Updated: 3 March 2021 4:10 AM GMT)

இடஒதுக்கீடு வழங்கியவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று பா.ம.க.வினருக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி் அறிவிக்கப்பட்டு விட்டது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்கள் உள்ளன. மனுத்தாக்கல் முடிவடைந்து, பரிசீலிக்கப்பட்ட மனுக்களை திரும்பப்பெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு இன்னும் 20 நாட்கள் ஆகும்.

அதற்குப் பிறகுதான் தேர்தல் பிரசாரம் தீவிரமடைய தொடங்கும். இவையெல்லாம் சாதாரணமான நாட்களில், சராசரியான அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய விஷயங்கள் ஆகும். ஆனால், நமக்கு இது சாதாரண காலமும் அல்ல, நாம் சராசரியான அரசியல் கட்சியும் அல்ல.

40 ஆண்டுகளுக்குமேல் போராடுகிறேன்

நம்மை நம்பியவர்களுக்கும், நல்லவை செய்தவர்களுக்கும் நன்றிக்கடன் செலுத்துவதில் நம்மை விஞ்ச இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை. அவ்வாறு நன்றிக்கடன் செலுத்துவதற்கான நேரமும், கடமையும் இப்போது நமக்கு வந்திருக்கிறது. அந்தக்கடமையை நிறைவேற்ற இன்றே நாம் தயாராவோம்.

வன்னியர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் போராடி வருகிறேன் என்றாலும்கூட, அந்த இடஒதுக்கீட்டை இப்போது வழங்கியது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான்.

நன்றிக்கடன்

நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு 10.50 சதவீதம் இடப்பங்கீட்டின் மூலம் அடித்தளம் அமைத்துள்ள அ.தி.மு.க.வுக்கு நாம் என்ன நன்றிக்கடன் செலுத்தப்போகிறோம்? என்பது தான் நம் முன் உள்ள வினா ஆகும். அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது தான் அந்தக்கட்சிக்கு பாட்டாளி சொந்தங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

கும்மிடிப்பூண்டி தொடங்கி, கன்னியாகுமரி வரை 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அணியே வெற்றி பெற வேண்டும். அந்த தொகுதிகளில் உள்ள பா.ம.க.வினர் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். நமது கோட்டையாக திகழும் 121 தொகுதிகளில் நமது முயற்சியால், உழைப்பால், பங்களிப்பால் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

வெற்றிக்கு உழைப்பு

இந்த 121 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் எந்தக்கட்சி வேண்டுமானாலும் போட்டி இடலாம்; யார் வேண்டுமானாலும் வேட்பாளராக களமிறக்கப் படலாம்; அவர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் பணிகளை தொடங்கலாம். அதைப்பற்றியெல்லாம் பா.ம.க.வினர் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இன்றுமுதலே களத்தில் இறங்கி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; வெற்றியை உறுதி செய்ய வேண் டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Next Story