காங்கிரசில் இருந்து வெளியேறி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் லட்சுமி நாராயணன்


காங்கிரசில் இருந்து வெளியேறி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் லட்சுமி நாராயணன்
x
தினத்தந்தி 3 March 2021 5:30 AM GMT (Updated: 3 March 2021 5:30 AM GMT)

காங்கிரசில் இருந்து வெளியேறிய லட்சுமி நாராயணன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு கடந்த வாரம் அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருந்த நிலையில், ஆளுந்தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளருமாக இருந்த லட்சுமி நாராயணன் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதன்காரணமாக நாராயணசாமியின் அரசு கவிழ்வது உறுதியானது. பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைதொடர்ந்து, நாராயணசாமி தனது பதவியினை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரசில் இருந்து வெளியேறிய லட்சுமி நாராயணன், புதுச்சேரியில் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் இன்று என்.ஆர்.காங்கிரசில் இணைந்துள்ளார்.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, “லட்சுமிநாராயணன் இணைந்தது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுவூட்டி உள்ளது. நான் முதல்வராக இருந்த போதே நல்ல முறையில் பணியாற்றியவர் லட்சுமி நாராயணன். ஆளுங்கட்சியில் இருந்த போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர் லட்சுமிநாராயணன். காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை” என்று கூறினார். 

Next Story