சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது


சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது
x
தினத்தந்தி 4 March 2021 4:08 AM GMT (Updated: 4 March 2021 4:08 AM GMT)

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு வினியோகம் 3-ந்தேதியுடன் (நேற்று) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இறுதிநாளான நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் விருப்ப மனு பெறுவதற்காக கட்சியினர் அதிக ஆர்வம் காட்டினர். இதுபோல காலை 9 மணி முதலே ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். கடந்த மாதம் 24-ந்தேதி முதல் நேற்று (மாலை 5 மணி வரை) வரையிலான கடந்த 8 நாட்களில் 8 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்த 8,240 பேருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெறுகிறது.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று இந்த நேர்காணலில் கட்சி பணி, தொகுதி கள நிலவரம், மக்கள் மனநிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story