அ.தி.மு.க.வில் பா.ஜ.க. தலையீடு இல்லை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி


அ.தி.மு.க.வில் பா.ஜ.க. தலையீடு இல்லை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2021 9:52 AM IST (Updated: 4 March 2021 9:52 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் பா.ஜ.க. தலையீடு இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா அலை

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம்தொட்டு இன்றும் அதே எழுச்சியுடன் அ.தி.மு.க. இருக்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் அலை வீசுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் காணாமல் போகும் அளவுக்கு, எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். மீண்டும் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மலரும்.

ஒரு புதிய வரலாற்றை அ.தி.மு.க. மீண்டும் படைக்க இருக்கிறது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி என்ற நோக்கில்தான் அ.தி.மு.க.வினரும், மக்களும் எதிர்பார்த்து பயணித்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

அ.தி.மு.க.வில் பா.ஜ.க. தலையீடு இல்லை

கேள்வி:- “சசிகலாவின் பலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றாகவே தெரியும். சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து அவர்கள் முடிவெடுத்து கொள்ளட்டும்'' என்று பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியிருக்கிறாரே?

பதில்:- எங்களை யாருமே நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அ.தி.மு.க.வின் உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட்டது கிடையாது. சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க பா.ஜ.க. நிர்ப்பந்தம் செய்வதாக வதந்தி பரப்புகிறார்கள். அ.ம.மு.க.வும் சரி, சசிகலாவும் சரி அ.தி.மு.க.வில் இணைவதற்கான சாத்தியமே இல்லை. அதற்கு 100 சதவீதம் வாய்ப்பே இல்லை. இதுதான் கட்சியின் உறுதியான நிலை.

தனது தலைமையில் தான் கூட்டணி என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது, எள்ளி நகையாடும் வகையில்தான் இருக்கிறது. குள்ள நரிகள் கூட்டமாக இருப்பதுதான் அ.ம.மு.க., சிங்கங்கள் கூட்டமாக இருப்பதுதான் அ.தி.மு.க. எனவே டி.டி.வி.தினகரன் பேச்சையெல்லாம் மக்கள் நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்வார்கள்.

வீணான கட்டுக்கதை

கேள்வி:- அ.தி.மு.க.வில் சசிகலாவை இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித்ஷா பேசியிருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- இதெல்லாம் வீணான கட்டுக்கதை. அந்த மாதிரி கருத்தை அமித்ஷா கூறவில்லை. அ.தி.மு.க.வின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஒரு நல்ல ஜனநாயக பண்பாக இருக்காது என்பது பா.ஜ.க.வுக்கும் நன்றாகவே தெரியும். எங்கள் கட்சிக்கு ஒரு கொள்கை, லட்சியம் இருக்கிறது. முடிவு எடுக்கவேண்டிய அதிகாரம் எங்கள் கட்சிக்கே இருக்கிறது. முடிவும் எடுக்கப்பட்டுவிட்டது. அந்தவகையில் அ.தி.மு.க.வில் சசிகலாவையோ, டி.டி.வி.தினகரனையோ சேர்க்க வாய்ப்பே இல்லை.

உறுதியான முடிவு

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க. வரவேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறதா?

பதில்:- எங்கள் கட்சியை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்கள் கூட்டணியில் பா.ஜ.க. ஒரு அங்கம். எனவே யோசனை வேண்டுமானால் தரலாம். அந்த யோசனையைத்தான் நாங்கள் என்றோ நிராகரித்துவிட்டோமே... எந்த சூழ்நிலையிலும் அதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே எடுத்த முடிவு உறுதியானது.

மேற்கண்டவாறு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Next Story