2 கன்டெய்னர் லாரிகளில் கொண்டுவந்த 56 ஆயிரம் புத்தக பைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
ராமநாதபுரம் அருகே 2 கன்டெய்னர் லாரிகளில் கொண்டு வந்த 56 ஆயிரம் புத்தக பைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 கன்டெய்னர் லாரிகளில் இருந்து மூடை, மூடையாக பொருட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருப்பதாக நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பறக்கும் படை குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மத்திய பிரதேசம் மற்றும் நேபாள பகுதி பதிவு எண் கொண்ட 2 கன்டெய்னர் லாரிகளில் இருந்து மினி சரக்கு வாகனங்களில் சிலர் மூடைகளை மாற்றிக்கொண்டிருந்தனர்.
புத்தக பைகள் பறிமுதல்
பறக்கும் படையினர் அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையில் அந்த கன்டெய்னர் லாரிகளில் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படம் பொறிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை என எழுதப்பட்ட பள்ளி புத்தக பைகளை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவை தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக ஆர்டர் கொடுக்கப்பட்டு உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட புத்தக பைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த பைகள் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் கல்வி மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக அந்தந்த கல்வி அலுவலகங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டபோது புத்தக பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
56 ஆயிரத்து 544 புத்தக பைகள்
2 கன்டெய்னர்களில் இருந்த மொத்தம் 56 ஆயிரத்து 544 புத்தக பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் சார்பில் வழக்கமாக வழங்கப்படும் புத்தக பைகள் என்பதால் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் முடியும் வரை மாணவர்களுக்கு வினியோகம் செய்ய முடியாது என்பதால் அந்த புத்தக பைகளை ராமநாதபுரம் புனித அந்திரேயா பள்ளியில் பத்திரமாக வைத்து, பறக்கும் படை அதிகாரிகள் முன்னிலையில் கல்வித்துறையினர் அந்த பைகள் உள்ள அறைகளை பூட்டி சீல் வைத்தனர்.
ஈரோட்டில்...
இதேபோல ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பங்களாப்புதூர் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவம் அச்சிடப்பட்ட புத்தக பைகள் நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கண்டெய்னர் லாரியில் வந்தன.
409 மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட 13 ஆயிரத்து 88 புத்தக பைகளை பள்ளிக்கூடத்தில் நேற்று மதியம் தொழிலாளர்கள் இறக்கிக்கொண்டு இருந்தார்கள். இதற்கு தி.மு.க, மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த வந்த பறக்கும் படையினர் புத்தகபைகளை பறிமுதல் செய்து, கல்வி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டனர்.
ரூ.8 லட்சம் வெள்ளி பொருட்கள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கடலூரில் இருந்து சீர்காழி நோக்கி வந்த, கோவை சலிவன் தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 44) என்பவரது காரில் வெள்ளி பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
ரூ.7 லட்சத்து 92 ஆயிரத்து 300 மதிப்பிலான விநாயகர், முருகன், நடராஜர், கோமாதா, வெங்கடாஜலபதி உள்ளிட்ட அந்த வெள்ளி பொருட்களை சீர்காழியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த வெள்ளி பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து சீர்காழி உதவி கலெக்டர் நாராயணனிடம் ஒப்படைத்தனர்.
பணம் பறிமுதல்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த மாடசாமி (வயது 47) என்பவர் தனது மனைவிக்கு நகை எடுப்பதற்காக சிவகாசியில் உள்ள ஒரு நகை கடைக்கு வாடகை காரில் வந்துள்ளார். அந்த காரை ராமமூர்த்தி ( 45) என்பவர் ஓட்டி வந்தார். நிலையான கண்காணிப்பு குழுவினர் காரை மறித்து சோதனை செய்தபோது மாடசாமியிடம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் இருந்தது.
இதற்கு முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல பெரம்பலூரில், உரிய ஆவணம் இன்றி திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா பி.கே.அகரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த டாக்டர் செந்தில் என்பவர் கொண்டு சென்ற ரூ.1 லட்சமும் கரூரில் ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story